Saturday, August 30, 2014

பிரச்சனையை எதிர்கொள்ளல்

Posted by Saruban On Saturday, August 30, 2014

பொதுவாக பிரச்சனைகளே மனிதனின் மனநிலையை மாற்றி பாதிப்பை தேடித்தருகிறது.





ஒரு பிரச்சனையை எதிர்கொள்ள அத்தருணத்தில் நாம் இருக்கும் மனநிலை ரொம்ப முக்கியம்.
நம் மனநிலை இருக்கும் நிலையைப் பொருத்தே அப்பிரச்சனையின் விளைவு எம் மனதை தாக்கும் அளவு அதாவது வெயிட்டேச்சும் மாறுபடும்.

சிக்கல்களுக்குள் நாம் சிக்கித்தவிக்கும் வேளையில் மூளையின் தர்க்கத்திற‌னை நம் மனநிலை குறைக்கும் செயல்பாடுகளில் ஈடுபடுகிறது.
அந்நேரத்தில் நிலைமையை புரிந்து கொண்டு அப்பிரச்சனையை மூளையின் உதவியுடன் அனுக வேண்டும்.
அது அவ்வளவு எளிதல்ல,ஆனால் தொடர் முயற்சியால் எதுவும் கைகூடும்.
எந்தவொரு விடயத்தை அனுக முன்னும் நொடிபொழுதில் அதன் விளைவு பற்றி சிந்தித்து செயலாற்ற வேண்டும். அதுவே பல பிரச்சனைகளை தவிர்த்து விடும்.
நாம் முதலில் நம் மனதினுள் இருக்கும் தேவையற்ற எண்ணங்களை துடைத்தெறிய வேண்டும்.
குப்பைகள் இருக்கும் இடத்தில் எப்பொழுதும் நமக்கு தேவையான பொருட்களை வைப்போமா?
இல்லை தானே.
நமக்குள் இருக்கும் மகத்தான சக்தியை உணர்ந்தால் எந்தவொரு தேவையற்ற / தீய எண்ணங்கள் நம்முள் வராது.

முந்தய பதிவொன்றில் மனதினுடைய சக்தி பற்றி அறியத்தந்திருந்தேன்.
மாபெரும் அகச்சக்தியை கொண்டுள்ள நாம் வீணாக பயனற்ற செயல்களை செய்து எம் சக்தியை வீணாக்க வேண்டுமா? அல்லது நம்மை நாமே தாழ்வாக எண்ணலாமா?
அனைவரினதும் பதில் இல்லை என்றே இருக்கும்.
நம் சக்தியை புரிந்து கொண்டிருந்தும் ஏன் எம்மால் சாதிக்க முடிவதில்லை.
இங்கு கவனிக்கத்தக்கது நாம் புரிந்து கொண்டுள்ளோமே தவிர ஏற்றுக்கொள்ளவில்லை.

இவையெல்லாவற்றிற்கும் காரணமென்ன, ஆழ் மனதிடம் உள்ள அளப்பரிய சக்தியை பயன்படுத்த விடாமல் தடுத்து பொய்யான ஒன்றை கற்பனை செய்ய வைத்து நம்மை திசை திருப்புகிறது நம் மேல் மனம். மேல் மனம் ஆழ் மனதிற்குரிய பாதையாக இருந்தாலும் அனைத்தையும் அது உள்ளே செல்ல அனுமதிப்பதில்லை.
அதனை தீர்மானிக்க வேண்டியது நாம் தான்.
எப்பொழுதும் நம் ஆழ் மனதினுள் தாழ்வான எண்ணங்களை அனுமதிப்பது கூடாது. அது மிகவும் ஆபத்தானது.
நாம் என்ன நினைக்கிறோமோ அதுவாகவே ஆகிறோம் என்பது எவ்வளவு தூரம் உண்மை என்பதை இங்கு புரிந்துகொள்ளலாம்.

ஆழ்மனது ஒரு விடயத்தை தீர்மானித்து விட்டால் அது இலகுவில் தன்னை மாற்றிக்கொள்வதில்லை, தன்னை அதுவாகவே மாற்றிக் கொள்கிறது.
நம் மனநிலையைப் பாதிப்பதில் ஆழ்மனம் செல்வாக்குச் செலுத்துகிறது.





எப்போதும் பிரச்சனைகளைப் பற்றியே சிந்திப்பதால் பிரச்சனை இலகுவில் தீரப்போவதில்லை. அப் பிரச்சனையை எவ்வாறு எதிர்கொள்வதால் அதிலிருந்து நம்மை விடுவிக்கலாம் என சிந்திப்பதே சிறந்தது.

பிரச்சனை உருவாகக் காரணம் நாமாகவோ அல்லது நம்மைப் போன்ற ஒரு மனிதனாகவோ தான் இருக்கக் கூடும்.
மனிதனால் உருவாககப்பட்ட ஒரு பிரச்சனையை தீர்க்க ஒரு மனிதனால் முடியாதென நினைக்கிறீர்களா?
நிச்சயம் முடியும்.
பிரச்சனையை உருவாக்கிய மட்டத்தில் இருந்து சிந்திப்பதை நிறுத்துங்கள், அது பிரச்சனையை தீர்க்க உதவாது.
வெவ்வேறு கோணங்களில் இருந்து சிந்தியுங்கள்.
முழுமையாக உங்கள் மனதின் மகத்தான சக்தியை ஏற்றுக்கொள்ளுங்கள்.
வாழ்வின் வெற்றிக்காக ஆழ் மனதின் சக்தியை பயன்படுத்துங்கள்.

மீண்டும் சந்திப்போம். 
 நன்றி.

Wednesday, August 27, 2014

மனம் செய்யும் விந்தை !!!

Posted by Saruban On Wednesday, August 27, 2014

வணக்கம் நண்பர்க்ளே,
சென்ற பதிவில் மனம் என்பதை பற்றிய சிறு விளக்கத்தை பார்த்தோம்.
 இன்றைய பதிவில் மனம் செய்யும் விந்தையை பற்றிப் பார்க்கலாம்.




மனம் பயணிக்கும் வேகத்திற்கு இணையானது இவ்வுலகில் ஏதும் இல்லை. (இப் பிரபஞ்சத்தில் வேண்டுமானால் இருக்கலாம்.)
ஆகையால் தான் இது செய்யும் விந்தை அளப்பரியதாக இருக்கிறது.

     
மனம் மாபெரும் சக்தி உடையது. மனதை கட்டுக்குள் கொண்டு வருவதால் அனைத்தும் வசப்படும் என்று சொல்ல முடியாது.
கட்டுப்படுத்தி வைக்கப்படும் மனதால் குறித்த ஓர் தேவையை வேண்டுமானால் சிறப்புற நிறைவேற்றலாம்.
ஆனால் வாழ்வை வசப்படுத்த முடியாது.
ஏனென்றால் அடக்குமுறைக்குட்படுத்தப்படும் அனைத்தும் ஒரு நாள் பெரும் கிளர்ச்சியை ஏற்படுத்தும்.(குசும்புக்காரன்: இப்ப என்னதான்பா சொல்ல வர்ரே நீ.)
அதுவே இயல்பான ஒன்றாக இருக்குமானால் அது அனைத்தையும் வசப்படுத்தும்.

மனதையும் தெளிவான நிலையில் இயல்பாக இருக்கப் பழக்கினால் அனைத்தும் உங்கள் வசம்.
பொதுவாக இந்நிலையில் இருப்பவர்கள் அரிது.

அவ்வாறு இருக்கப் பழக்குவது கடினமல்ல..அதற்காக இலகுவென்றும் எண்ண வேண்டாம்.( குசும்புக்காரன்: ஏய் முதல்ல நீ தெளிவா இருக்கியா, இல்லையான்னு சொல்லுடா)

ஒவ்வொருவர் மனநிலையும் வெவ்வேறு நிலைகளில் இருப்பதால் சிலருக்கு அது இலகுவாக கைகூடினாலும் பலருக்கு சற்று கடினமானதாக காணப்படும்.

'படகு இருந்தால் மட்டும் போதுமா துடுப்பு இருந்தால் தானே செல்ல வேண்டிய இலக்கை துல்லியமாகவும் சரியான நேரத்திலும் அடைய முடியும்.'

ஒருவன் எவ்வளவுதான் புத்திசாலியாக இருந்தாலும் அவனுடைய புத்திசாலித்தனத்தை பயன்படுத்த வேண்டிய தருணத்தில் அவனுடைய மனநிலை எந்நிலையில் இருக்கிறதென்பதை பொறுத்தே அந்நேரத்தில் அவனால் வெளிப்படுத்தப்படும் ஆற்றலின் தன்மையும் வேறுபடும்.

சிலர் மனநிலை நிலைகுலைந்தாலும் தானாகவே மறுபடியும் சீர் செய்யப்படும். சிலர் மனநிலையை சரிசெய்ய வேறு ஒருவரின் உதவி தேவைப்படும்.

சிலர் தானாகாவும் சரி செய்ய மாட்டார்கள், மற்றவர் உதவி கிடைத்தாலும் அதைப்புறக்கணிப்பர்.
அவர்கள் மிகவும் ஆழமாக உள்ளார்த்தாமாக பாதிக்கப்பட்டதால் அவர்களை ஓர் திடநிலைக்கு கொண்டு வருவது பகீரதப் பிரயத்தனம்.
அதிலும் சிலர் தாங்கள் இவ்வாறு ஆழமான பாதிப்புக்குட்பட்டுள்ளோம் என ஏற்க மறுப்பார்கள் அவர்கள் நிலை மேலும் கவலைக்கிடமானது.

கடைசியாகக் சொன்ன இரு நிலைகளும் பொதுவாக தற்கொலை எண்ணத்தை தூண்டுவதோடு தற்கொலைக்கும் இட்டுச் செல்கிறது.

இதில் ஆச்சரியமான விடயம் என்னவென்றால் என்னுடைய நிலையும் கடைசியாக சொல்லபட்டதில் முதல் நிலை.
நான் மன ரீதியாக பாதிக்கப்பட்டதை அறிந்தும் மீள முடியாத படி இருக்கின்றேன். நானும் மனநிலை சரியில்லாதவன் தான்.
(குசும்புக்காரன்: இவ்வளவு நேரமும் லூசு கூடவா பேசிக்கிட்டிருக்கோம்.)




மனதை அதன் வழியிலேயே சென்று தெளிவான சிந்தனைக்கு மாற்ற வேண்டும்.
அப்படி மாற்றும் போதே நாம் அதன் விந்தையை உணர முடியும்.
மனதை அதன் வழியிலேயே சென்று நம் வழிக்கு கொண்டு வருதல் பற்றி இனி வரும் பதிவுகளில் காண்போம்.

என் சுய ஆராய்ச்சிகள் தொடரும்.
நீங்களும் உங்கள் கருத்தை கூறலாம்.

வருகைக்கு நன்றி நண்பர்க்ளே !

Tuesday, August 26, 2014


ரொம்ப நாளைக்கு அப்புறம் இப்பதாங்க கொஞ்சம் Time கிடைச்சுது.
இனி தொடர்ந்து என் எண்ணச் சிதறல்களையும் அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கின்றேன்.



மனம் என்றால் என்ன?

உலகின் புரிந்து கொள்ளக்கடினமாக எல்லோராலும் அறியப்பட்ட ஒன்று மூளை.
அம் மூளையால் உருவாக்கப்பட்ட கற்பனை இயந்திரமே மனம்.
மூளையால் உருவாக்கப்பட்ட மனம் மூளையினுள் அமையவில்லை என்பது ஏனென்று தெரியவில்லை.
அப்ப அது எங்க தான் இருக்கு? (குசும்புக்காரன்: தெரிஞ்சா சொல்ல மாட்டமா? அவ்வ்வ்!)
எனக்கு கவலை வரும் போதெல்லாம் மார்புப்பகுதியில் இனம் புரியா வலி ஏற்படுகின்றது. என்னுடைய மூளை என் மனதை அங்கு தான் ஸ்தாபித்திருக்க வேண்டும்.
ஒரு சிலருக்கு அவ்விடம் வேறுபடலாம்.

மனதிற்கும் மூளைக்கும் மிகவும் உறுதியான பிணைப்பும் உள்ளது, இடைவெளியும் உள்ளது.
இது மிகவும் சிக்கலான ஓர் விடயம்.
மூளை மிகவும் ஒரு சிக்கலான கட்டமைப்பாக அறியப்படுகிறது. ஆனால் மூளையால் உருவாக்கப்பட்ட கற்பனை இயந்திரமான இம் மனம் மூளையையே தன் கட்டிற்குள் கொண்டு வருகிறது என்றால் மனம் எவ்வளவு சிக்கலான கட்டமைப்பு என்பதை சொல்லத்தேவையில்லை.

இங்கு இன்னொரு விடயம் என்னவென்றால் மிகவும் சிக்கலான கட்டமைப்பை உடைய மூளையால் உருவாக்கப்பட்ட மனம் அம் மூளையை கட்டுப்படுத்தும் அளவிற்கு சிக்கலானதென்றால் அம் மனதைப்பற்றிய புரிந்துணர்வை ஏற்படுத்தும் மூளை மேலும் சிக்கலான ஒன்றாக இருக்க வேன்டும்.
ஆனால் மிகவும் சிக்கலான அமைப்பான மூளையை தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் மனமும் மாபெரும் சிக்கலாக இருக்க வேண்டும் என்பதில்லையே ! ( குசும்புக்காரன்: பல நேரங்களில் தீர்வு எளிமையாக இருக்க நாம் சிக்கலான ஒன்றை நோக்கி பயணித்து தீர்வை மேலும் சிக்கலாக்குவது போலத்தான்.) 

ஒரு வேளை மனம் மிகவும் எளிமையான ஒன்றாக இருக்கலாம். அவ் எளிமைக்குள் மாபெரும் சிக்கல் இருப்பதை மறுக்க இயலாது.

மனம்,  சிக்கலானதா? 
               எளிமையானதா?
   இதன் தீர்வு மனதிடமே உள்ளது.

என்னப் பொறுத்த வரையில் இது மிகவும் எளிமையான சிக்கல் கட்டமைப்பு.
இது இவ்வளவு சிக்கலாக இருக்க காரணம் இது செயல் உருவம் அற்றதாக இருப்பதும் காரணமாக இருக்கலாம்.
(குசும்புக்காரன்: கண்ணுக்கு தெரிவதே ரொம்பச் சிக்கலா இருக்கு,இதுல இது கண்ணுக்கே தெரியாதாம்ல....வெளங்கிடும்...)





பிற் குறிப்பு: குசும்புக்காரன் வேற யாருமில்லைங்க. நம்ம பயல் தான். அடிக்கடி மண்டைக்குள்ள இருந்து எட்டிப்பார்த்து ஏதாவது கேள்வியக் கெளப்பி விட்றுவான்.அப்புறம் நாந்தான் திணற வேண்டியிருக்கும்.


இவையனைத்தும் என் சுய ஆராய்ச்சிகள்.
நீங்களும் உங்க்ள் கருத்தை பதிவிடலாம்.